இடைத்தேர்தலுக்குத் தயாராகும் திருவாரூர்!

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இடைத்தேர்தலுக்குத் தயாராகும் திருவாரூர்!

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானதால் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜன.28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக: திமுக தலைவரான பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறது. அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 
இவருக்காக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளதாக திமுகவினர் தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் அவரை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை தயங்கினால், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அடுத்த தேர்வாக உள்ளது. மேலும், திமுகவைச் சேர்ந்த தியாகபாரி உள்ளிட்டோரது பெயர்களும் வேட்பாளர் தேர்வில் அடிபடுகின்றன.
அதிமுக: அதிமுக வெற்றி பெற்றால் அது வரலாறு படைக்கும் என்பதால், வேட்பாளர் தேர்வை மிகுந்த கவனமுடன் கையாண்டு வருகிறது. மாவட்டப் பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், எம்ஜிஆர் பேரவைச் செயலாளர் முகம்மது அஸ்ரப், அம்மா பேரவை நகரச் செயலாளர் எஸ். கலியபெருமாள், அவரது மனைவியும், முன்னாள் வார்டு கவுன்சிலருமான மலர்விழி கலியபெருமாள், அதிமுக ஒன்றியச் செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், அவரது மனைவி மலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் முதல் நாளில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், எஸ். கலியபெருமாள் ஆகியோரது பெயர்கள் அதிகம் அடிபடுகின்றன. இதில், உணவுத் துறை அமைச்சருக்கு நெருக்கமான எஸ். கலியபெருமாள் வேட்பாளர் தேர்வில் முன்னிலை வகிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
அமமுக: இந்தத் தொகுதியில் பெரிய அளவிலான செல்வாக்கு இல்லாத அமமுக, அதிமுகவின் ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், 2011-இல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட எம். ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் இருந்தாலும், எஸ். காமராஜுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு: கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் திமுக வெற்றி வாய்ப்பில் முன்னிலை வகிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பேரத்தில், எதிர்க்கட்சிகள் திமுகவின் ஒதுக்கீட்டை எதிர்ப்பில்லாமல் ஏற்க வேண்டுமெனில் பிரமாண்ட வெற்றியைப் பெற வேண்டியது அவசியமாகிறது. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில், வேட்பாளர் தேர்வும் திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாகக் கருதப்படுவதால், வேட்பாளர் தேர்வில் திமுக அதிக கவனம் எடுத்துக் கொள்கிறது.
கடந்த தேர்தல் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் அல்லது அதே அளவாவது பெற பிரபலமான வேட்பாளரே தேவை என்பதை உணர்ந்துள்ளது. 
ஒருவேளை குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றால் கூட அது வெற்றியாகக் கருதப்படாது என்பதைத் திமுக தலைமை உணர்ந்திருக்கிறது. 
காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களில் பெயரளவுக்கு மட்டுமே பங்குகொண்ட திமுகவுக்கு, காங்கிரஸ் எந்த அளவுக்கு தேர்தல் பணி செய்யும் என்பது போகப்போகத் தெரியும். ஏனெனில், எந்த அளவுக்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கிறதோ அல்லது தோற்கிறதோ அந்த அளவுக்கு காங்கிரஸின் நாடாளுமன்ற சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று காங்கிஸ்காரர்கள் கருதுகிறார்கள்.
துரைமுருகன் கிளப்பிய சர்ச்சை, மதிமுக, விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தொண்டர்களின் தேர்தல் பணிகளில் எதிரொலிக்குமா என்பது இனி வரும் நாள்களில் தெரியும். அழகிரி இதுவரையில் எதுவும் தெரிவிக்காததும் திமுகவினரிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இனி வரும் நாள்களில் அவர் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், திமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணிகளுக்கு அழைத்துச் செல்வது திமுகவுக்கு சவாலான பணியாகவே இருக்கப் போகிறது. 
இதுவரை, அதிமுக 1984-லும், 1991-லும் மட்டுமே திருவாரூரில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த இரண்டு தேர்தல்களுமே அனுதாப அலைத் தேர்தல்கள் என்பதால் அவற்றை உண்மையான வெற்றியாகக் கருத முடியாது. இந்தமுறை அந்த நிலையை மாற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்பது அதிமுகவின் குறிக்கோளாக உள்ளது. அதற்கு நலத்திட்டங்கள் கைகொடுக்கும் என்று நம்புகின்றனர்.
அதேநேரம் அமமுக பெறும் வாக்குகள் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பதோடு, அதிமுகவின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் ஆட்டத்தைக் கொடுக்கக்கூடும். 
இதன்மூலம் தொண்டர்கள், நிர்வாகிகளின் நிலை ஊசலாடத் தொடங்கிவிடும் என்கிற கருத்தும் நிலவுகிறது. மற்ற கட்சியினர் போட்டியிட்டால் அது வேட்பாளர் எண்ணிக்கைக்கும், வாக்குகளை பிரிக்கவுமே உதவக் கூடும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
திருவாரூர் தொகுதியில் முக்குலத்தோர், தலித்துகள், பிள்ளைமார்கள் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. இடதுசாரிகளும் இந்தத் தொகுதியில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கின்றனர். திமுக ஆதரவுடன் இடதுசாரி வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவருக்குத்தான் வெற்றி உறுதி என்று இடதுசாரிகள் கருதுகின்றனர். 
இந்தப் பின்னணியில்தான் இடைத் தேர்தலுக்கு திருவாரூர் தயாராகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com