8, 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தம்: அரசு பேருந்துகளின் சேவை பாதிக்கப்படுமா?

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
8, 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தம்: அரசு பேருந்துகளின் சேவை பாதிக்கப்படுமா?


மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு பேருந்துகளின் சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, பல துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

 இந்த வேலைநிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அகில இந்திய அளவிலான  வேலை நிறுத்தத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார். 

இதனால் 8,9 ஆம் தேதி அரசு பேருந்துகளின் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால், அந்த இரு நாள்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்கப்பட மாட்டாது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளதுடன், இரண்டு நாள்களும் மருத்துவ விடுப்பைத் தவிர, வேறு எந்தவகையான விடுப்பும் ஊழியர்கள் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com