என்எல்சி விவகாரம் குறித்து முதல்வருடன் விரைவில் பேச்சுவார்த்தை: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து முதல்வருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து முதல்வருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
 கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகம் முழுவதும் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட ரூ.100 பணப் பரிசு, தற்போது கஜா புயலால் 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் சிரமமின்றி பொங்கலை கொண்டாடும் பொருட்டு, ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, முதலீட்டுப் பணம் திரும்ப வழங்குதல் என்ற சலுகையை அமைச்சரவை கூடி முடிவெடுத்துள்ளது. இதன்படி, ஒரு நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறதோ அதற்கேற்ப பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், மின்சார மானியம், தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் 6 மாத பயிற்சிக்கு மானியம் வழங்கப்படும். இது வேறு எந்த மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்படாத நடைமுறை என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
 என்எல்சி இந்தியா நிறுவனம் தனது 3-ஆவது சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு கடலூர் மாவட்டத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: இந்தப் பிரச்னை அரசின் கவனத்தில் உள்ளது. இதுதொடர்பாக அரசுத் துறைச் செயலர், முதன்மைச் செயலர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு என்எல்சி தலைவரிடம் கூறியுள்ளேன். தொடர்ந்து, முதல்வரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் கூறியுள்ளேன். விரைவில், இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
 என்எல்சி என்பது மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாகும். எனவே, திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும். ஜெயங்கொண்டத்தில் சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ வசம் உள்ளது. ஆனால், சுமார் 4 ஆயிரம் பேர் வழக்கு தொடுத்துள்ளதால் அது நிலுவையில் உள்ளது. என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் லாபத்துடன் இயங்கும் நிறுவனம். அதன் லாபத்தை வெளி மாநிலங்களில் முதலீடு செய்யக் கூடாது. தமிழகத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எனவே, சுரங்க விரிவாக்கத் திட்டம் நடப்பிலேயே உள்ளது என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com