
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மேல் உயர் அழுத்த மின்தடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவைச் சேர்ந்த டி.சின்னச்சாமி தாக்கல் செய்த மனுவில், நாங்கள் தித்திஒப்பனஹள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமானப் பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றோம்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர்களிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், விவசாய நிலம், குடியிருப்புப் பகுதிகளுக்கு மேல் உயர் அழுத்த மின்தடத்தை அமைக்கும் பணிகளை, இந்திய மின்வழித்தடக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான அளவீட்டு பணிகளையும் செய்து வருகிறது. இந்த உயர் அழுத்த மின்தடத்தில் இரவு நேரங்களில் செலுத்தப்படும் அதிகமான மின்சாரத்தின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின்தடம் அமைக்கக் கூடாது என பென்னாகரம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விவசாய நிலத்தின் மேல் உயர் அழுத்த மின்தடம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.அருண், இந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், பொதுமக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக, தமிழக மின்துறை முதன்மைச் செயலர், இந்திய மின்வழித்தடக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், தருமபுரி மாவட்ட ஆட்சியர், பென்னாகரம் வட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தார்.