கொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் 'தெஹல்கா' மேத்யூஸ்  

கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கான கூடுதல் ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன் என்று தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் தெரிவித்துள்ளார். 
கொடநாடு ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்: சூடு கிளப்பும் 'தெஹல்கா' மேத்யூஸ்  

சென்னை: கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கான கூடுதல் ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன் என்று தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர்  மேத்யூஸ் சாமுவேல் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அந்த கருத்துகள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் அளித்த புகாரின் அடிப்டையில், சயன், மனோஜ் ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்றப்பரிவு போலீஸார் தில்லியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம், சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. மேலும்  சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கான கூடுதல் ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன் என்று தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர்  மேத்யூஸ் சாமுவேல் தெரிவித்துள்ளார். 
 
புதனனன்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கொடநாடு சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய சென்னையில் வழக்குரைஞர்களை  சந்திக்க வந்துள்ளேன்.

சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரம் என் மீதும் எடப்பாடி  வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். மற்றபடி அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.இந்த குற்றச்சாட்டுக்கு அவர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.

ஒரு புலனாய்வு செய்தியாளனாக  கொடநாடு விவகாரத்தில் எனது வேலையை நான்   முழுமையாக செய்தேன். 

கொடநாடு சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை சொல்வது எடப்பாடி பழனிசாமியின் முக்கிய கடமை.

எனது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com