ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

சென்னை  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வியாழனை அன்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தலைமையில் ஒன்றுபட்டு 22-1-2019 முதல் காலவரையற்ற  வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் நடைபெறுகிற அதேநேரத்தில் ஆர்ப்பாட்டம், மறியல் என பல வடிவங்களில் போராட்டம் தொடர்கிறது. இவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து வரும் நிலையில், தவிர்க்க இயலாத சூழலில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.  

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,  ஆசிரியர்- அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்திலுள்ள   முரண்பாட்டைக் களைய வேண்டுமென்றும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டுமென்றும், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக்கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்றும், 3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென்றும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-12-2018 லிருந்து நடைபெறும் என ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது.  உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஆசிரியர், அரசு ஊழியர்  கோரிக்கைகளை  மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில், வேலைநிறுத்தம் மூன்று முறை  ஒத்தி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்த போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாநில அரசு எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை. இதனால் ஜாக்டோ ஜியோ 22-1-2019 முதல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநில அரசு முன்வராததே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரணமாக உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணாத மாநில அரசின் ஜனநாயக விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாக ஜாக்டோ ஜியோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராடும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் நலன்களை பாதுகாக்க முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வலியுறுத்துகிறது.  

போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை கைவிடவும் இப்போராட்டத்திற்கு துணை நிற்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com