மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டினார்.
மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 201.75 ஏக்கரில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகரில் நடைபெற்றது.
புது தில்லியிலிருந்து காலை 11 மணியளவில் மதுரைக்கு தனி விமானத்தில் வந்தடைந்தார். அங்கிருந்து மண்டேலா நகருக்கு காரில் சென்றவர், நண்பகல் 12 மணியளவில் அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.