மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களைப் பணிநிரந்தரம் செய்திட முன்வர வேண்டும்..... 
மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களைப் பணிநிரந்தரம் செய்திட முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஒருங்கிணைந்தக் கல்வி – உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் தமிழகப் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, இயன்முறை பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அளித்து வரும் சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேரப் பாதுகாப்பு மையங்களின் காவலர், உதவியாளர் ஆகியோர் 1998ஆம் ஆண்டு முதல் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்திலும், 2002ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பணியாளர்கள் வாயிலாக ஆண்டுதோறும் ஏறக்குறைய 1.5 இலட்சம் தமிழக மாற்றுத்திறன் குழந்தைகள் தமிழகப் பள்ளிகளில் பயனடைந்து வருகின்றனர். ஆனால், அப்பணியாளர்களின் நிலையென்பது மிகவும் நலிவடைந்தே இருக்கிறது. 2015 ஆண்டு முதல் வளமைய வங்கிக் கணக்கிலிருந்து ஊதியம் பெற்று வந்தப் பணியாளர்களை பள்ளியில் இணைக்கப்பட்டு கிராமக் கல்விக்குழு வங்கி கணக்கு வழியாக ஊதியம் கிடைத்திட நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மேலும், வளமைய அலுவலங்களிலோ, பள்ளிகளிலோ இவர்க்கென்று இருக்கைகள்கூட நிலைதான் இருக்கிறது. அவர்கள் பணியைவிட்டுச் சென்றால் பணி அனுபவச் சான்றுகூடப் பெறாத நிலைதானிருக்கிறது. தொகுப்பூதியம் என்ற வகையில் ஊதியம் பயின்று வந்தவர்களுக்கு 2012 முதல் பணிக்கட்டணம் என்ற வகையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மிகவும் நலிவுற்றப் பொருளாதார சூழ்நிலையில் பணியாற்றி வரும் அப்பணியாளர்களுக்குரிய வாய்ப்புகள் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகவே, ஏறக்குறைய 20 ஆண்டுகாலமாய் பணிபுரிந்து வரும் சிறப்புப் பயிற்றுநர்களைக் கருணையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனும் கோரிக்கையை அவர்கள் அரசிற்கு முன்வைக்கிறார்கள். ஆகவே, அக்கோரிக்கையில் இருக்கும் தார்மீக நியாயத்தைப் புரிந்துகொண்டு அப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அப்பணியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com