புதிய விஷயங்களை எழுத இளைஞர்கள் ஆர்வம்: பத்திரிகையாளர் மாலன்

தமிழில் இதுவரை எழுதப்படாத விஷயங்களை எழுத இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார்.
புதிய விஷயங்களை எழுத இளைஞர்கள் ஆர்வம்: பத்திரிகையாளர் மாலன்
Updated on
1 min read


தமிழில் இதுவரை எழுதப்படாத விஷயங்களை எழுத இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார். 
தமிழின் மூத்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன், 2013-18 வரை சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தவர். இப்போது, சாகித்ய அகாதெமியின் பொதுக் குழுவில் அங்கம் வகிக்கிறார். 
சாகித்ய அகாதெமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தினமணிக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: 
மூத்த எழுத்தாளர்களின் தொடர்ச்சிதான் தாங்கள் என்பதை இளம் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மூத்த எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படித்து, அதைத் தங்களது எழுத்துகளுக்கான உரமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில், எதையும் படிக்காமல், பல இளைஞர்கள் எழுதுகின்றனர். இதனால், அவர்களுடைய எழுத்தில் அழுத்தம் இல்லாமல் போகிறது. 
எழுத்தில் வாசகன் யோசிப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்க வேண்டியது எழுத்தாளனின் கடமை. அதை அவர்கள் கொடுக்க தவறுகின்றனர். 
மேலும், இளைஞர்கள் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை எழுதுவதும் குறைவாக உள்ளது. புதிய விஷயங்களை தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் இளம் எழுத்தாளர்கள் முனைப்பாக உள்ளனர். தமிழில் இதுவரை எழுதப்படாத விஷயங்களை எழுத வேண்டும் என்பதில் அவர்கள் பேராவலுவுடன் உள்ளனர். திருநங்கைகள், ஒரினச்சேர்க்கை ஆகியவை தொடர்பாக அவர்கள் எழுதுகின்றனர். 
புறநானூறு தொடக்கம் போர் தொடர்பாக தமிழில் பேசப்பட்டு வந்தாலும், இலங்கையில்தான் சமகாலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர். 
அந்தப் போர் புது வகை இலக்கியத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுபோல, புலம் பெயர் அனுபவங்கள் தொடர்பாக தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதும் தமிழுக்குப் புதிதாகும். இவை வரவேற்கத்தக்கவை என்றார் மாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com