அழிவின் விளிம்பில் அரிக்கன்மேடு

அழிவின் விளிம்பில் உள்ள அரிக்கன்மேட்டில் ஆய்வுப் பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அழிவின் விளிம்பில் அரிக்கன்மேடு

புதுச்சேரி: அழிவின் விளிம்பில் உள்ள அரிக்கன்மேட்டில் ஆய்வுப் பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 புதுச்சேரி அருகேயுள்ள அரிக்கன்மேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப் பெரிய பாரம்பரியம், பெருமைகளைக் கொண்ட இடம். பழங்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கன்மேடு, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை உள்ளிட்டவை வணிகத் தலங்களாகத் திகழ்ந்தன.
 புதுவை மாநிலத்துக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், தமிழர்களின் அரிய பொக்கிஷமாகவும் அரிக்கன்மேடு விளங்குகிறது. புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள அரிக்கன்மேடு, சோழர் காலத்தில் மீனவ கிராமமாகத் திகழ்ந்தது. அரிக்கன்மேடு அழகான, அமைதியான இடம் மட்டுமன்றி, இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு இருந்தது. கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத் தலமாகவும் விளங்கியது.
 அரிக்கன்மேட்டில் மாந்தோப்புகளுக்கு மத்தியில், "பிஞ்ஞோ தெபெகெய்ன்' என்ற கிறிஸ்தவ மதகுருவின் அழகிய வீடு இருந்தது. இது, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை புதுச்சேரி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமானதாக இருந்தது. இங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன.
 தற்போது, அந்த வீடு சிதிலமடைந்து, வரலாற்று எச்சமாக உள்ளது. பரந்து விளங்கிய அரிக்கன்மேடு கடல் அரிப்பாலும், இயற்கை மாற்றங்களாலும் மிகச் சிறிய தீவுப் பகுதியாக காணப்படுகிறது.
 இந்தப் பகுதியில் கடந்த 1940-இல், தென்னங்கன்றுகளை நடுவதற்காக குழி தோண்டிய போது, மண் ஜாடி, 200 வகையான மண்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதையடுத்து, 1944-இல் மார்ட்டின் வீலர் என்பவர் அரிக்கன்மேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். அதன் பின்னர்தான், பல்வேறு உண்மைகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன.
 இதைத் தொடர்ந்து 1949-இல் ழான் மேரி கழல் என்பவராலும், 1991-இல் டாக்டர் விமலா பெக்லி என்பவராலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அழகிய செங்கல் சுவர், ஈமத் தாழிகள், பல வண்ண மணிகள், பலவகை ஓடுகள் கண்டறியப்பட்டன.
 இங்கு கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. 11 அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூனைக் கண் மணிகளும் கிடைத்தன. மணி உருக்கு சட்டங்கள், சாயக் கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சை மாணிக்கக் கல், படிக மணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமானிய காசுகள், மோதிரம், உறை கிணறுகள், மீன் முள்ளால் ஆன கலைப் பொருள்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
 மூன்று கி.மீ. தொலைவுக்கு பூமிக்கு நெடுகில் புதைந்துள்ள ஒரு பெரிய நகரம், ஆற்றில் மறைந்துள்ளது தெரிய வந்தது. தற்போது, இந்தப் பகுதி மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
 இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிக்கன்மேடு தற்போது பராமரிப்பின்றி, பாழாகி வருகிறது. இந்த இடத்தின் முக்கியத்துவம், சிறப்புகள் பொதுமக்களை சென்றடையவில்லை. முள் புதர்கள் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதுடன் எவ்விதப் பாதுகாப்புமின்றி உள்ளது.
 இந்தப் பகுதிக்குச் செல்லும் சாலை மிகக் குறுகியதாகவும், மோசமாகவும் உள்ளது. அரிக்கன்மேட்டின் பெருமை குறித்து கேள்விப்பட்டு வரும் ஒரு சிலருக்கும் இந்த இடம் பாதுகாப்பற்றதாக உள்ளதால், அச்சமடைகின்றனர். இதனால், இந்தப் பகுதியைக் காண வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
 எனவே, இந்தப் பகுதியை பராமரித்து, பாதுகாப்பு வசதிகளுக்கு ஏற்பாடு செய்து, சுற்றுலாத் தலமாக மாற்றி, அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கலையரங்கம் (ஆர்ட் கேலரி) அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கலாம். இதன் மூலம் இந்தப் பகுதியின் பெருமை, சிறப்பம்சம் வெளி உலகைச் சென்றடையும். அரசுக்கும் வருவாய்க் கிடைக்கும்.
 இதுகுறித்து எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலருமான துரை.ரவிக்குமார் எம்.பி. கூறியதாவது:
 தமிழர்களின் வரலாறு அரிக்கன்மேட்டில் புதைந்து கிடக்கிறது. கீழடியில் ஆய்வு நடத்துவது போல, அரிக்கன்மேட்டிலும் ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு நடத்தினால், தமிழர்கள் பற்றிய பல அரிய செய்திகள் வெளிவரும். இது குறித்து மக்களவையில் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றார் ரவிக்குமார்.
 - பீ.ஜெபலின் ஜான்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com