
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களை இணைத்து அனுப்பாத மாணவர்களுக்கு, அவற்றை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை mbbsbds2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை (ஜூலை 3) மாலை 7 மணிக்குள் அனுப்பலாம்.
அந்த மின்னஞ்சலில் மாணவர்கள், தங்களது விண்ணப்ப எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது.
ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, தரவரிசைப் பட்டியலை வெளியிட இயலவில்லை என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.