
கல்விக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை பூஜ்ய நேரத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள கல்விக் கடன் விவகாரம் குறித்து அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, கல்விக் கடன் வழங்குவது தொடங்கப்பட்டது. பல ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்கள் கல்விக் கடன் பெற்று தொழில்முறை கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்நிலையில், அரசு மாறவும் முன்னுரிமைகளும் மாறின. கல்விக் கடனுக்கான பெரும்பாலான விண்ணப்பங்கள் 15 தினங்களில் செயல்முறைப்படுத்தப்
படவில்லை. இதன் காரணமாக பெற்றோர் வட்டிக்காரர்களிடம் கடன் பெறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மூன்றாம், நான்காம் வகை பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன. இதுபோன்ற குறைகளுக்குத் தீர்வுகாண வங்கிகளில் வழிமுறைகள் இல்லாத நிலை உள்ளது. எனவே, மத்திய நிதியமைச்சர் முந்தைய அரசு போல கல்விக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சாத்தியம் இருந்தால், படித்து முடித்து வேலைவாய்ப்புப் பெற இயலாத இளைஞர்களின் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.
கீழடி அகழாய்வு தொடர வேண்டும்: மக்களவையில் செவ்வாய்க்கிழமை பூஜ்யநேரத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:
சிவகங்கையில் உள்ள கீழடி கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிக காலத்திற்கு முந்தைய நாகரிகத்திற்கான சாத்தியக்கூறு அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த அகழாய்வின் போது மத நினைவுச்சின்னம் ஏதும் கண்டறியப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட நாகரிகம் இருந்ததற்கான சாத்தியக்கூறு அர்த்தத்தை அளிக்கிறது. இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே, இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டிய 110 ஏக்கரை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
ஐந்தாவது கட்ட அகழாய்வுப் பணி தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறையும் இந்த முயற்சியில் தாமாக ஈடுபட வேண்டும். இந்த அகழாய்வில் தொடக்கத்தில் கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட இளம் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இத்திட்டத்தில் பணியமர்த்தப்பட வேண்டும்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 13,600 தொல்பொருள்கள் மைசூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் அவை மீண்டும் தமிழகத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட வேண்டும். தேர்ந்தெடுத்த தொல்பொருள்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்திற்கு கார்பன் சோதனைக்காக அனுப்பப்பட வேண்டும். மேலும், இந்த அகழாய்வு கண்டுபிடிப்புகள், சர்வதேச வல்லுநர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.