
காஞ்சிபுரம்: கோயில் வரை செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயிலுக்கு அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயில் அருகே சென்றுவர அனுமதிச் சீட்டு தன்னிடம் இருந்தும், தனது ஷேர் ஆட்டோவை காவல்துறையினர் அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார், கோயிலுக்கு அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள், அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அவர் படுகாயத்துடன் அவரது ஷேர் ஆட்டோவிலேயே ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.