
ஜாதி பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கு, நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரமுண்டு; எஸ்.சி. பட்டியலில் 17 ஜாதிகளை சேர்த்து உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்தது முறையல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்களுக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில், ஓபிசி பட்டியலில் இருக்கும் காஷ்யப், ராஜ்பர், திவார், பிந்த் உள்ளிட்ட 17 ஜாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.சி. ஜாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா கேள்வியெழுப்பினார். அவர் கூறுகையில், ஜாதி பட்டியல் தொடர்பான உத்தரப் பிரதேச அரசின் உத்தரவு, பல்வேறு ஜாதியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால் அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். அதற்கு மத்திய சமுகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அளித்த பதில் வருமாறு:
எஸ்.சி. பட்டியலில் 17 ஜாதிகளைச் சேர்த்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது முறையில்லை. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதும் இல்லை. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு, ஜாதி சான்றிதழை அளிக்க வேண்டாம் என மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஜாதி சான்றிதழ் அளிக்கப்படும்பட்சத்தில், யாரேனும் நீதிமன்றத்தை அணுகினால், உத்தரப் பிரதேச அரசின் உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடும். இதனால் யாருக்கும் பயன் கிடைக்காது. தனது யோசனையை செயல்படுத்துவதில் உத்தரப் பிரதேச அரசு உறுதியாக இருந்தால், அதற்கான நடைமுறையை அந்த அரசு பின்பற்ற வேண்டும். மத்திய அரசுக்கு தனது திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். அதன்மீது மத்திய அரசு பரிசீலனை செய்யும்.
ஒரு பட்டியலில் இருக்கும் ஜாதியை, இன்னொரு பட்டியலுக்கு கொண்டு செல்வது என்பது நாடாளுமன்றத்தின் தனி உரிமையாகும். ஜாதி பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கு, நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரமுண்டு. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் கிடையாது. குடியரசுத் தலைவருக்கு கூட, ஜாதி பட்டியலில் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்யவோ அதிகாரம் கிடையாது.
கடந்த காலங்களில், ஜாதி பட்டியல் விவகாரத்தில் 3 முதல் 4 திட்டங்கள், நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அதற்கு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளிக்கவில்லை. மேற்கண்ட ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதை பாஜகவும் ஆதரிக்கிறது. ஆனால் அதற்கான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று பாஜக கருதுகிறது. நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி, மாநில அரசு செயல்பட முடியாது என்றார் கெலாட்.
முன்னதாக, எஸ்.சி. பட்டியலில் 11 ஜாதிகளை சேர்ப்பது தொடர்பான உத்தரவை உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சமாஜவாதி அரசும் பிறப்பித்தது. பின்னர் அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு தனது திட்டத்தை மாநில அரசு அனுப்பி வைத்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு, அந்த உத்தரவை ரத்து செய்தது. எனினும், கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த சமாஜவாதி அரசு, அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே முயற்சியை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசும் தற்போது மேற்கொண்டுள்ளது.