
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தகவலை பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிவிக்க தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பாக வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-இல் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016, அக்டோபர் 24 முதல் காலியாக உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 12,542 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொறு பஞ்சாயத்துக்கும் ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு ஆண்டுதோறும் அளிக்கும் ரூ. 4 ஆயிரம் கோடி செலவிடப்படாமல் வீணாகிறது. மேலும், உள்ளாட்சிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட முடியாத சூழலும் நிலவி வருகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லை. இது தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வாக்காளர் இறுதி பட்டியல் இன்னும் தேசிய தகவல் ஆணையத்திடம் (என்ஐசி) இருந்து எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. வழக்கமாக ஜனவரி மாதம் அளிக்கப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் கிடைத்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர முடியும். இதற்காக 90 நாள்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கி அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஜெய சுகின் ஆஜரானார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மா ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து, இதுவரை மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணை ஆகிய தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.