
இருகூர்-குரும்பபாளையம் இடையே விவசாய நிலத்தில் விழுந்து கிடக்கும் தேஜஸ் ரக விமானத்தின் எரிபொருள் டேங்க் உதிரி பாகங்களை பார்வையிடும் விமானப்படை அதிகாரிகள்.
சூலூர் அருகே இருகூர் வான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட தேஜஸ் ரக போர் விமானம் செவ்வாய்க்கிழமை பறந்தபோது எரிபொருள் டேங்க் கழன்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி, விமானத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கோவை மாவட்டம், சூலூரில் 43 -ஆவது விமானப் படைப்பிரிவும், 5 -ஆவது பழுது நீக்கும் படைப்பிரிவும் உள்ளன. இங்கு மிக் 21, மிராஜ், உள்நாட்டுத் தயாரிப்பு இலகு ரக விமானமான தேஜஸ் ரக போர் விமானங்களும், தரங் எனும் ஆபத்துக் காலத்தில் உதவும் வகையிலான ஹெலிகாப்டர் படைப்பிரிவும் உள்ளன. இங்கு அவ்வப்போது விமானங்கள் பயிற்சிக்காக வானில் பறப்பது வழக்கம்.
இவ்வாறு பறக்கும்போது சூலூர், காரணம்பேட்டை, அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், பாப்பம்பட்டி, இருகூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் மீது பறந்து விமானிகள் சோதனை ஓட்டம், பயிற்சியில் ஈடுபடுவர். செவ்வாய்க்கிழமை காலை மூன்று தேஜஸ் ரக போர் விமானங்கள் பறந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது இருகூருக்கும் குரும்பபாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு தேஜஸ் ரக போர் விமானத்திலிருந்து கரும்புகையுடன் எரிபொருள் டேங்க் கழன்று விழுந்தது. இதனை இருகூர் பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர்.
இதனால் விமானம் கீழே விழுந்துவிட்டதாக நினைத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து போலீஸார் பார்த்தபோது, குரும்பபாளையத்துக்கு அருகிலுள்ள நந்தகுமார் என்பவரது விவசாய நிலத்தில் விமான எரிபொருள் டேங்க்கின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விமானப்படை அதிகாரிகள் விழுந்தது விமானம் அல்ல, விமானத்தின் இரண்டாவது எரிபொருள் டேங்க் என தெரிவித்தனர். இதனிடையே அந்த விமானம் பத்திரமாக சூலூர் விமானப்படைதளத்தில் தரையிறங்கியதாகவும், கூடுதலாக இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட எரிபொருள் டேங்க் மட்டுமே கீழே விழுந்து சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விமான டேங்க் விழுந்த விவசாய நிலத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில்தான் பெட்ரோலிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எரிபொருள் டேங்க் விழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு திடீரென விமானிக்கு தெரியவந்ததால் உடனடியாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விமானத்தின் டேங்க் பகுதியை கழற்றிவிட்டதாகத் தெரிகிறது.
விமான எரிபொருள் டேங்க் விழுந்த விவசாய நிலத்தில் சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. விவசாயப் பணிக்கு ஆள்கள் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. திடீரென விமானத்தின் பாகம் விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியை பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.