சென்னைக்கு ரயிலில் வரும் குடிநீர்: ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சம் பில் போடும் ரயில்வே

சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னைக்கு ரயிலில் வரும் குடிநீர்: ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சம் பில் போடும் ரயில்வே


சென்னை : சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ரயில்வேக்கு தமிழக அரசு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 

வாருங்கள் தெரிந்து கொள்வோம். 
அதாவது, 55,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 பெட்டிகள் மூலம் சென்னைக்கு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக ஒரு நடைக்கு ரயில்வேக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.8.6 லட்சம். அப்படியானால் ஒரு லிட்டர் நீருக்கு 34 பைசா செலவிட்டு தமிழக அரசு தண்ணீர் கொண்டு வருகிறது.

ஜோலார்பேட்டை  - வில்லிவாக்கம் வரையிலான 204 கி.மீ. பயண நேரம் சுமார்  5 - 7  மணி நேரம். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வரும். இதில் 10 முதல் 15 சதவீத தண்ணீர் சிந்திவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சம் என்றால், 30 நாட்களுக்கு ரயில்வேக்கு தமிழக அரசு ரூ.7.74 கோடியை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆனால், இதைவிட, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் குடிநீருக்கு ரூ.150 செலவாகிறது என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையொட்டி, கடந்த வாரத்தில் முதற்கட்டமாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் அமைக்கப்பட்டு, அதிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மேட்டுச்சக்கரக்குப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை குடிநீர்க் குழாய் அமைக்க அப்பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இப்பணிகள் முடிந்து புதன் அல்லது வியாழக்கிழமையில் சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com