
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக-வின் வெற்றியை எந்நாளும் தட்டிப் பறிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கு கடிதம் என்ற வடிவில் அக்கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திட்டமிட்டு சதி செய்து, வீணாகப் பழி போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலூர் தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை எப்படியாவது அபகரிக்கமுடியுமா என ஆலோசனை நடத்துகிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளால் திமுகவின் வெற்றியைத் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது.
வேலூர் கோட்டை எப்போதும் திமுகவின் வெற்றிக் கோட்டை. இப்போதும் அதில் சிறிதும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில், கட்சியின் தொண்டர்கள் களப்பணி ஆற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...