சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

நிரவி பகுதியில் மானாம்பேட்டை கிராம உள்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினர், விரைந்து பணிகளை


நிரவி பகுதியில் மானாம்பேட்டை கிராம உள்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினர், விரைந்து பணிகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிரவி -திருப்பட்டினம் தொகுதி மேம்பாட்டு நிதியில், நிரவி கொம்யூனுக்குள்பட்ட விழிதியூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகள் மற்றும் நிரவியில் சாலைப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விழிதியூர் பகுதியில் உள்ள மானாம்பேட்டை கிராமத்தின் உள்புறச் சாலைகள் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், 2018-2019-ஆம் ஆண்டின் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இந்த கிராமத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 12 லட்சம் நிதியை  பேரவை உறுப்பினர் ஒதுக்கினார். இந்த சாலைப் பணியின் நிலையை அறியும் வகையில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் பேரவை உறுப்பினரும்,  புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன்  மானாம்பேட்டைக்கு புதன்கிழமை சென்றார். நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் என். ரவி மற்றும் பொறியாளர் குழுவினர் பேரவை உறுப்பினருக்கு சாலைப் பணியின் தற்போதைய  நிலவரத்தை விளக்கிக் கூறினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தார்ச்சாலையாக உருவெடுக்கும் வகையில் அடுத்தக்கட்ட பணிகள் அடுத்த சில நாள்களில் தொடங்கப்பட்டு, அடுத்த 20 நாள்களுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படுமென பேரவை உறுப்பினருக்கு விளக்கிக் கூறினர். அடுத்த சில மாதங்களில் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி நிரவி கொம்யூனில் நடைபெறும் சாலைப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கத் தேவையான 
நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரவை உறுப்பினர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com