அத்திவரதர் தரிசனம்: அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அத்திவரதரைத் தரிசிக்க வருபவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கூறினார்.
அத்திவரதர் தரிசனம்: அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அத்திவரதரைத் தரிசிக்க வருபவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கூறினார்.
மேலும், நெரிசலில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: 
அத்திவரதரைத் தரிசிக்க வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் காயமுற்றுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். அத்திவரதரைத் தரிசிக்க வருபவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று   அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது:
அத்திவரதரை திருவோணம் நட்சத்திரமான வியாழக்கிழமை தரிசனம் செய்ய சுமார் 1.75 லட்சம் பக்தர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள்.
ஆவடியை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி நாராயணி அத்திவரதரை தரிசனம் செய்தபின் வீடு திரும்பும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தமிழக அரசு அமைத்திருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளது என்றும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் எனவும் தெரிவித்தனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் நடராசன் தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தக் கொதிப்பும், இருதய நோயும் அவருக்கு இருந்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
ஆந்திரம் குண்டூரைச் சேர்ந்த சோமசேகர ராவ் மனைவி கெங்கலட்சுமி தரிசனம் முடித்து வீடுதிரும்பும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றார். இவர் தீவிர ரத்தக் கொதிப்பு நோயாளி. இவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சேலத்தைச் சேர்ந்த வைகுண்டன் என்பவரின் மகன் ஆனந்த் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு வலிப்பு ஏற்பட்டதும், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு உயிரிழந்தார்.
ஆந்திரம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சக்தி அஜய்குமார் அத்திவரதரைத் தரிசித்துவிட்டு, மூலவர் தரிசனம் முடித்துவிட்டு படிக்கட்டில் இறங்கும்போது, கால் தவறி விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரும் உயிரிழந்தார். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
அனைத்து ஏற்பாடுகள் தயார்: அத்திவரதரை வியாழக்கிழமை மட்டும் 1.75 லட்சம் பேர் தரிசனம் செய்ய வந்திருந்தனர். திருப்பதியில்கூட ஏழுமலையானை  தரிசிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் பேர்தான் வருகின்றனர். எல்லா ஏற்பாடுகளும் அங்கே இருக்கின்றன.
ஆனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரைத் தரிசிக்க இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும், இருக்கும் கூட்டத்தைச் சரிசெய்து அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலையில், அதற்குப் போதிய வசதிகள் முழுவதும் செய்யப்பட்டுள்ளன. தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com