நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை

திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை


திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

நெல்லையில் திமுக முன்னாள் மேயர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீது காவல்துறையின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. மதுரையில் திமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக இருக்கும் சீனியம்மாளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்தலில் போட்டியிட இடம் பெற்று தருவதாகக் கூறி சீனியம்மாளிடம், உமா மகேஸ்வரி பண மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு வேளை பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில், உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், சீனியம்மாளின் செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலைச் சம்பவம்..

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகசங்கரன் (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (65) திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர். இவர், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றினார்.

இருவரும் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில்  வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (30)  பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் கணவர் லால்பகதூர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரி ஆகியோர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதை பார்த்தார். தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, மூவரும் தனித்தனி அறைகளில் கத்திக்குத்து, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்ததைக் கண்டனர். மூவரின் சடலங்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com