திமுக முன்னாள் மேயர் கொலையில் பல 'இல்லை'களால் காவல்துறை சந்திக்கும் தொல்லைகள்!

திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 
திமுக முன்னாள் மேயர் கொலையில் பல 'இல்லை'களால் காவல்துறை சந்திக்கும் தொல்லைகள்!

திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 

சம்பவம் நடந்த பகுதியில் நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார். உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடும்பத்தினருடன் சொத்து தகராறு இருந்ததாகவும், முருகுசங்கரன், தனது வீட்டுக்கு யார் வந்தாலும் வாசலிலேயே பேசி அனுப்பி விடுவார் என்பதும் கொலை குறித்து விசாரிக்கும் தனிப்படையினருக்கு முக்கியத் துப்புகளாக உள்ளன.

இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு பல்வேறு விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளது. கொலையாளிகள் முன் பக்க வாசல் வழியாகவே வீட்டுக்குள் வந்து, கொலை செய்துவிட்டு முன்பக்க வாசல் வழியாகவே வெளியேறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், உமா மகேஸ்வரியின் வீடு அமைந்திருந்தது ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதி. ஊருக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லை என்பதும் அவர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த கொலையாளிகள் முதலில் உமாமகேஸ்வரியையும், பிறகு அவரது கணவரையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

பிறகு அலறல் சத்தம் கேட்டு வந்த பணிப்பெண் மாரியின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான், உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் வீடு அமைந்துள்ளது. இவர்களது வீட்டில் இருந்து மற்ற வீடுகளுக்கான தொலைவு 500 மீட்டர்.

இவர்களது வீட்டின் முன் பக்கம் இருக்கும் சாலையை வெகு சிலரே பயன்படுத்துகிறார்கள்.  அதனால் கொலையாளிகள் முன் வழியாகவே வீட்டுக்குள் வந்துள்ளனர். நெருக்கமாக வீடுகள் இல்லை, சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை, வீட்டில் காவலாளி இல்லாதது, சிசிடிவி கேமரா இல்லாததும் குற்றவாளிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது.

சாலையின் அருகில் இருக்கும் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தான் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் பிரமுகர் வீடு என்று தெரிந்தும், வெறும் நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற சந்தேகமே, கொலையில் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று காவல்துறையைத் தேட வைக்கிறது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தது காவல்துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, உமா மகேஸ்வரி உட்பட 3 பேரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகசங்கரன் (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (65) திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர். இவர், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றினார்.

இருவரும் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (30)  பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் கணவர் லால்பகதூர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரி ஆகியோர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதை பார்த்தார். தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, மூவரும் தனித்தனி அறைகளில் கத்திக்குத்து, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தைக் கண்டனர். மூவரின் சடலங்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

3 தனிப்படைகள்: மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூறியது:
கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கத்திக்குத்து காயம் உள்ளது. உமா மகேஸ்வரி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 3 பேர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஆதாயத்துக்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஒரு காவல் உதவி ஆணையர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கொலை நிகழ்ந்துள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இருப்பினும், இப்பகுதியில் வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com