அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் கண்ணன்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதேபோல, அத்திவரதர் தரிசனத்துக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்க கோரியும், வரதராஜர் சந்நிதியைத் திறக்க கோரியும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், அத்திவரதர் தரிசனம் நடைபெறும் கோயிலைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி என மொத்தம் 6 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை, கடந்த 1-ஆம் தேதி முதல்  24-ஆம் தேதி வரை 34 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்காக செய்யப்பட்ட மருத்துவ வசதிகளின் மூலம் இதுவரை 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மேலும், 22 வயது இளைஞர் உள்பட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இறந்த 6 பேரும் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அனைவரும் அத்திவரதரை தரிசித்து விட்டு வந்த பின்னர் தான் உயிரிழந்துள்ளனர். 

மேலும் அத்திவரதரே மூலவர் தான். ஒரு கோயிலில் ஒரே நேரத்தில் இரண்டு மூலவர்கள் இருக்கக் கூடாது. எனவே வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் சன்னதி மூடப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக போலீஸ் பாதுகாப்புடன், அன்னதானம், பழரசம், தண்ணீர் உள்ளிட்டவைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்துக்கு கூடுதல் ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுவதுடன் இருசக்கர வாகன வசதிகளும் உள்ளன. கோயிலின் தெற்கு மாட வீதி நெரிசல் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வசதிக்காக அவர்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோயிலைச் சுற்றியுள்ள 250 குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வாகனங்களில் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி மூடப்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனக் கோரி வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தான் முடிவெடுக்க வேண்டும். உள்ளுர் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புகள் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் இல்லை. அத்திவரதரை தரிசித்த பின்னர் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதா என அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். 

அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த்பாண்டியன், இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவரும் கோயிலின் கிழக்கு கோபுரம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேற்கு கோபுரத்தின் வழியாக முக்கியப் பிரமுகர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள், நன்கொடையாளர்கள் அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பொது தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதில்லை. கடந்த 18-ஆம் தேதி வரை வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இந்த தரிசனம் நிறுத்தப்பட்டது. 

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள மூலவர் சன்னதி உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை தீர்ப்புக்காக வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 29) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com