அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம் காமராஜர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம் காமராஜர் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார். 
சிதம்பரத்தில் காமராஜர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில், அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
சிதம்பரத்தில் காமராஜர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில், அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
Updated on
2 min read


அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம் காமராஜர் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார். 
சிதம்பரம் காமராஜர் பேரவையின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா, காமராஜரின் 117-ஆவது பிறந்த தின முப்பெரும் விழா ஆகியவை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தெற்கு சன்னதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 
விழாவுக்கு தலைமை வகித்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதாவது: 
அரை நூற்றாண்டாக விழா நடத்தி வரும் காமராஜர் பேரவைக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் தினமும் ஏதாவதொரு மூலையில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதென்றால், அது காமராஜர் பெயர்தான். இது அவரது அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம்.
72 வயது வரை வாழ்ந்த அவர், தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கினார். தனது ஆட்சிக் காலத்தில் காமராஜர் செய்த அளப்பரிய சாதனைகள் வெளியில் தெரியாமல் போனதற்கு, அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் அதுகுறித்து விளம்பரப்படுத்தத் தெரியாததே காரணம். 
தமிழகத்தில் சமூக நீதி செயலா க்கம் பெற்றதற்கு காமராஜர் மட்டுமே காரணம். ஆனால், அவர் அதுகுறித்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. அவரது சாதனைகளை தங்களது சாதனைகளாக மற்றவர்கள் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கண்டுள்ளது. இதில் முதல் திருத்தம் காமராஜரின் வற்புறுத்தலால் கொண்டு வரப்பட்டது பரவலாகப் பேசப்படுவதில்லை. புதிதாக  உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு வழியில்லாமல்  போனது.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர், அப்போதைய பிரதமர் நேருவுடன் விவாதித்து இடஒதுக்கீட்டுக்கான திருத்தத்தைக் கொண்டுவந்தார். 
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, பிரிவு 23 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து தமிழகத்தில் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தினார். 
அதனால்தான், தமிழகத்தில் இப்போதும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நீடிக்கிறது. ஒருவர் வாழும் போது செய்த சாதனைகள் அவரது மரணத்துக்குப் பிறகும் பேசப்பட்டால், உணரப்பட்டால் மட்டுமே அவரை ஆளுமையாகக் கருத முடியும். காமராஜர் இறந்து 44 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இதுபோன்ற விழாக்களின் மூலம் இன்றைக்கும் நினைவுகூரப்பட்டு வருகிறார்.  அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களை மட்டுமே இளைய தலைமுறையினர் கொண்டாட வேண்டும். 
சமுதாய மறுமலர்ச்சியைக் கொ ண்டு வந்தவர், சுயமரியாதைக்கு காரணமானவர், தமிழர்கள் சிறந்த கல்வி கற்று உலகம் முழுவதும் பரவக் காரணமானவர் காமராஜர் மட்டுமே. பேசப்படாவிட்டாலும் அவர் பத்து ஆண்டுகள் நிகழ்த்திக்காட்டிய சாத னைகளை யாரும் மறுத்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பார் திருவள்ளுவர். காமராஜர் விட்டுச் சென்றதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் சாதனைகள் என்றார் ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல முதல்வர் சாந்தா கோவிந்த் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக, ராணி சீதை ஆச்சி மேல் நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் எஸ். விநாயகம் வரவேற்றார். காமராஜர் பேரவைத் தலைவர் அ.இலக்குமணன், செயலர் இரா.ஜீவா விஸ்வநாதன், வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைதம்பி, இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன், எஸ்.சி.-எஸ்.டி. நிதிப் பரிந்துரைக் குழு உறுப்பினர் தில்லை சீனு, முன்னோடி விவசாயி பேரூர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com