மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்தால் ஆவணங்களுடன் அறிக்கை அனுப்ப வேண்டும்: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு

மாணவர்களின் வருகைப் பதிவு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன்  அனுப்பி வைக்க வேண்டும் என
Updated on
2 min read


மாணவர்களின் வருகைப் பதிவு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன்  அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ)  2019-ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பள்ளிக்கு குறைவாக வருகை தந்த மாணவ, மாணவிகளே சிபிஎஸ்இ தேர்வுகளில் மோசமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே பள்ளிக்கு குறைவாக வருகை தரும் மாணவர்களைச் சமாளிக்க, நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியது:  தேர்வு விதிமுறை 13-இன்படி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச வருகைப்பதிவு அவசியம். அதே சமயத்தில் விதி 14-இன் கீழ் வருகைப்பதிவு எத்தனை சதவீதம் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி அளிப்பது என்பதையும், எந்த அடிப்படையில் பரிசீலிக்கப் போகிறோம் என்பதையும் தீர்மானிக்கலாம்.
ஆவணங்களை அளிப்பதில்லை:  பெரும்பாலும் மாணவர்கள், பெற்றோர்,  விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது. வருகைப் பதிவேட்டில் ஏதேனும் விலக்கு தேவையான பட்சத்தில் மாணவர்கள் உரிய ஆவணங்களை, சான்றிதழ்களை பள்ளிகளிலும் அளிப்பதில்லை. அதேபோன்று வருகைப் பதிவேட்டில் சிக்கல் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் சிபிஎஸ்இ வாரியத்துக்கும் பள்ளிகள் அனுப்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
2019-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தபோதுதான், பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாக வருகை தந்திருந்த  மாணவ, மாணவிகள்தான்  தேர்வுகளில் மோசமாக செயல்பட்டது தெரியவந்தது.  மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட சதவீதத்துக்கும் குறைவாக வருகை தந்தால் அதைச் சரிசெய்வதற்காக சிபிஎஸ்இ வாரியம் நிலையான விதிகளை பள்ளிகள், மாணவர்கள், பெற்றோருக்காக இணக்கமாக உருவாக்கி இருக்கிறது. இதன்படி, மாணவர்கள் வருகை குறித்த விவரங்களை அந்தந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பள்ளிகள் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யார்-யாருக்கு விதிவிலக்கு?:  இந்த விதிமுறைகளில், சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீண்டகாலம் ஒரு மாணவர் நோயால் அவதிப்படுதல், தாய், தந்தை திடீர் மரணமடைதல், இதுபோன்ற இயற்கை காரணங்கள், தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றல் ஆகியவற்றுக்கு மாணவர்கள் விலக்கு பெறலாம்.  மேலும் விலக்குப் பெறும்போது பெற்றோரிடம் இருந்து சான்றுடன் கடிதம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கடிதம் பெறுவதோடு பள்ளியின் பரிந்துரைக் கடிதம் ஆகியவை அவசியம்.  ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மாணவர்களின் வருகை குறித்த விவரங்களை தேதி வாரியாக ஜனவரி 1-ஆம் தேதிவரை பதிவு செய்து, வருகை குறைந்த மாணவர்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். 
மண்டல அலுவலகங்களுக்கு...: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 7-ஆம் தேதிக்குள் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்த சான்றுகளையும் சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ்கள், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்து அதை தெரிவித்தால், குறித்த நேரத்துக்குள் பள்ளிகள் பதில் அளித்து, ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
தேர்வு தொடங்குவதற்கு முன் அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ வாரியத்திடம் இருந்து பள்ளிகள் ஒப்புதல் பெற வேண்டும். சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி அறிக்கையின் மீது இறுதியான முடிவு வாரியத்தால் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com