8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை: காவிரி ஆற்றில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்!

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாமல் இருப்பதைத் தொடர்ந்து, திருச்சி காவிரி ஆற்றில் மலர்தூவியும்,

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாமல் இருப்பதைத் தொடர்ந்து, திருச்சி காவிரி ஆற்றில் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் விவசாயிகள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை கர்நாடகம் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து தர மறுத்து வருவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறாமல் உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாண்டும் தமிழகம் கேட்ட தண்ணீரை தராமல் கர்நாடகம் கால தாமதம் செய்து வருகிறது.
 இதையடுத்து, தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர் (படம்).
 முன்னதாக, கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் காவிரி தனபாலன் கூறியது:
 காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாகத் திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். கர்நாடகாவில் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும். கர்நாடகம் காவிரி நீரை தர மறுத்தால் உரிய அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 காவிரி ஆணையம் உத்தரவிட்ட பிறகும் வரும் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகம் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எட்டு வழிச்சாலைத் திட்டம் அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு எதிரானது. ஆனால், மக்களின் கருத்தை கேட்டு அவர்களது ஒப்புதலுடன் எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com