
சென்னை: நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று ஒற்றைத்தலைமை விவகார சர்ச்சை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவிற்கு வலுவான ஒற்றைத்தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஒற்றை தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக குன்னம் அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் கருத்து கூறியதால் அதிமுகவில் சர்ச்சை நிலவியது. இத்தகைய பரபரப்பான சூழலில் சென்னையில் ஜூன் 12-இல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று ஒற்றைத்தலைமை விவகார சர்ச்சை குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் நிர்வாகம், தேர்தல் முடிவுகள், கட்சியின் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. அதிமுக செயல்பாடு குறித்து கட்சியினர் சிலர் கூறிவரும் கருத்துகள் வரவேற்கத்தக்கவையாக இல்லை.
கருத்துகளை கூற செயற்குழு, பொதுக்குழு என்று பல வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊர் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.
அதிமுகவை பார்த்து நம் எதிரிகளும் கூட நம்மைப்போல் இருக்க ஆசைப்பட்டார்கள். அதிமுக மீதான அன்பு, பற்று அடிப்படையில் இத்தகைய கருத்துகளை கூறிவருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
கட்சி நிர்வாக முடிவுகள், தேர்தல் முடிவுகள் பற்றியோ, தங்கள் பார்வைகள் பற்றியோ கருத்துக்கூறக்கூடாது. அதிமுகவினர் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
அதிமுக தொண்டர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் தேவை. ஊடகங்கள் வாயிலாக, கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும்.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.