
அத்திவரதர் பெருவிழாவையொட்டி அனந்தசரஸ் குளத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்கான சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை மேலே கொண்டு வருவதற்கான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஜூன் 6-ஆம் தேதி தீர்த்தவாரி நிறைவு பெற்றதையடுத்து, திருக்குளத்தின் நீரை வெளியேற்றுவதற்கான மின் மோட்டார்கள் குளத்தில் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, அனந்தசரஸ் குளத்து நீரை பொற்றாமரை குளத்துக்கு மாற்றுவதற்கான முதல் கட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அனந்தசரஸ் குளம், பொற்றாமரை குளம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. பின்னர், மின்மோட்டார்கள் மூலம் அனந்தசரஸ் குளத்தின் கிழக்கே உள்ள பொற்றாமரை குளத்துக்கு நீர் மாற்றும் பணிகளின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
குளத்து மீன்கள்: இந்நிலையில், அனந்தசரஸ் குளத்தில் திரளான மீன்கள் உள்ளன. இக்குளத்திலிருந்து நீரை வெளியேற்றும்போது மீன்கள் பாதிக்கக் கூடும். இதனால், மீன்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, பின்னர் குளத்து நீரை வெளியேற்றலாம் என ஆலோசனை நடத்தப்பட்டது. இதனால், குளத்து நீரை வெளியேற்ற சில நாள்கள் ஆகலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.