திருத்துறைப்பூண்டியில் தொடங்கியது நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா சனிக்கிழமை (ஜூன் 8) கோலாகலத்துடன் தொடங்கியது.
திருத்துறைப்பூண்டியில் தொடங்கியது நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா சனிக்கிழமை (ஜூன் 8) கோலாகலத்துடன் தொடங்கியது.
 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வு நெல் திருவிழா. கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் கிரியேட் அமைப்பின் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து, அண்மையில் மறைந்த நெல் ஜெயராமனால், 12 ஆண்டுகளாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நெல் திருவிழாவில் பேரணி, பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, உணவுத் திருவிழா, விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை வழங்கும் நிகழ்வு ஆகியவை நடைபெறும்.
 மேலும் விவசாயத்தை மேம்படுத்துவது, சந்தைப்படுத்துவது, விவசாயத்தைப் பாதிக்கும் காரணிகள் குறித்த கருத்தரங்குகளும் நடைபெறும். இதில், தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பங்கேற்பது வழக்கம்.
 அதன்படி, நிகழாண்டுக்கான நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை தொடங்கியது.
 அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணி நெல் திருவிழா நடைபெறும் மண்டபத்துக்கு வந்தடைந்த பின்னர், அங்கு இயற்கை வேளாண் பொருள்கள் குறித்த கண்காட்சி திறப்பும், மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் உருவப்பட திறப்பும் நடைபெற்றது. தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
 நிகழ்ச்சியில் கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் இரா. பொன்னம்பலம், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் பத்மா ரகுநாதன், இந்திய உணவுப் பயிர் பதனீட்டுக் கழகத்தின் இயக்குநர் சி. ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 10 பேருக்கு நெல் ஜெயராமன் விருது வழங்கப்பட்டது.
 பிற்பகலில் நடைபெற்ற அமர்வுகளில், பாரம்பரிய நெல் ரகங்களில் காணப்படும் பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டு வளரும் திறன் குறித்தும், இயற்கை வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் சான்றிதழ் பெறுவதில் விவசாயிகளின் கூட்டு முயற்சிகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், நுகர்வோர் பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், விதையைச் சுற்றியிருக்கும் அரசியல் மற்றும் விதை மீதான உழவர்களின் உரிமையும், விதை நிறுவனங்களின் காப்புரிமை என்னும் மாயவலை குறித்தும் பல்வேறு வேளாண் வல்லுநர்கள் பங்கேற்ற விவாதங்கள் நடைபெற்றன. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவாயப் பிரதிநிதிகள், விவசாயிகள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர்.
 விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு
 விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
 திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது:
 ஊரில் உள்ள தெய்வத்துக்கு அல்லது குல தெய்வத்துக்கு அல்லது தாய்- தந்தைக்கு விழா எடுப்பதும், திருவிழா நடத்துவதும் வழக்கம். ஆனால், நெல்லுக்குத் திருவிழா எடுத்த மாமனிதர் நெல் ஜெயராமன். அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. முன்னோர்கள் பயன்படுத்திய, 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார் அவர்.
 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவரது பெயர், பாரம்பரிய நெல் உள்ளிட்டவை குறித்து இடம் பெற்றுள்ளது. நெல் ஜெயராமனுக்கு தமிழக அரசு எப்போதும் உரிய மரியாதை அளிக்கும்.
 புதிய நெல் ரகத்துக்கு ஜெயராமன் பெயர் வைக்க வேண்டும் எனவும், திருவாரூரில் அவரது பெயரில் ஆராய்ச்சி மையம் தொடங்க இடம் வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி, கண்டிப்பாக நிறைவேற்றுவேன். விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. விவசாயிகள், ஏற்றுக் கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றார் அமைச்சர் காமராஜ்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com