திருவண்ணாமலையில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணி 90% நிறைவு: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலையில் ரூ.28 கோடியில் 123 அறைகளுடன் கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக
Updated on
1 min read

திருவண்ணாமலையில் ரூ.28 கோடியில் 123 அறைகளுடன் கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில், ரூ.28 கோடியில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதை, ஈசான்ய லிங்கம் அருகே 430 பக்தர்கள் தங்கும் வகையில், 123 அறைகளுடன் இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது.
 இதேபோல, கிரிவலப் பாதை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குக்கு பின்னால் ரூ.75.50 லட்சத்தில் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் மற்றும் அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டும் இடம் ஆகியவற்றை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, 3 தளங்களுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 430 பக்தர்கள் தங்கும் வகையில், 123 அறைகள் கட்டப்படுகின்றன. குளிர்சாதன வசதி கொண்ட அறைகளும், குளிர்சாதன வசதி இல்லாத அறைகளும், குடில்களும் அமைக்கப்படுகின்றன.
 பக்தர்கள் வசதிக்காக மின் தூக்கிகள் மற்றும் தனியே உணவு விடுதி, ஓட்டுநர்கள் தங்கும் இடம், துணிகளை சலவை செய்யும் இடமும் அமைக்கப்படுகின்றன.
 பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பக்தர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு பின்னால் 1.85 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ரூ.75.50 லட்சத்தில் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினரால் உபயமாக மணிமண்டபம் கட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வசம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
 ஆய்வின்போது, அரசின் முதன்மைச் செயலரும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருமான க.பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, விழுப்புரம் கோட்ட இணை ஆணையர் செந்தில்வேலவன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர், திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com