தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்கியது. கேரளத்தையொட்டி உள்ள எல்லை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்கியது. கேரளத்தையொட்டி உள்ள எல்லை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் தண்ணீர்த் தேவையை தென்மேற்குப் பருவமழை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தை பொருத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்வது வாடிக்கை. நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை சற்று தாமதமானது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்கியது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அரபிக்கடலில் இருந்து கேரளத்துக்கு மேகக்கூட்டங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால், அங்கு பரவலாக மழை பெய்யும்.
 அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளத்தின் மற்ற பகுதிகளிலும், தென் தமிழகத்திலும் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு சாதகமான சூழல் காணப்படுகிறது.
 லட்சத்தீவு பகுதி மற்றும் அதையொட்டி தென்கிழக்கு அரபிக்கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, ஈரப்பதக் காற்று எங்கும் செல்ல முடியாமல் ஒரு பகுதியில் சுற்றி வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய
 தமிழக மாவட்டங்களில் ஈரப்பதக் காற்று நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், வெப்பநிலையும் குறையாமல் உள்ளது. ஈரப்பதக் காற்று தமிழகத்துக்குள் வந்தபிறகு, மழை பெய்ய தொடங்கும். வெப்பநிலை குறையவும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 பலத்த மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் 12 மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
 நாகர்கோவிலில் பலத்த மழை
 நாகர்கோவில், ஜூன் 8: தென்மேற்குப் பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தக்கலை, குலசேகரம், களியல் உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் 45 நிமிஷங்களில் 16.3 மி.மீ. மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் குளிர்ந்த நிலை உருவானது.
 அதேபோல், தக்கலை, குலசேகரம், களியல், திற்பரப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. களியக்காவிளை, வன்னியகோடு, குளப்புறம், தையாலுமூடு, படந்தாலுமூடு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com