
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த அப்துல் சலீம் மகன் அகமது ஷெரீப் (26). சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவந்தார். இவர் தனது தாய் ஷிராஜ் நிஷா (50), சகோதரிகள் அசீரா பீ (22), சுமையா (23), உறவினர் கவுஸ் மைதீன் மனைவி நசீமா பானு (56) ஆகியோருடன் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு, சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அகமது ஷெரீப் ஓட்டிவந்தார்.
சனிக்கிழமை அதிகாலை கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் சாலையில் ரெட்டாகுறிச்சி அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அகமது ஷெரீப், ஷிராஜ் நிஷா, நசீமா பானு ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அசீரா பீ, சுமையா ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த, விபத்து குறித்து சிறுப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.