
விரைவில் தமிழகம் முழுவதும் 4ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு மாநில தலைமைப் பொது மேலாளர் வி.ராஜூ சனிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் டி.ஞானையா நினைவு கல்வி உதவிக்குழு சார்பில், சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜூ, 4ஜி சேவை குறித்து கூறியதாவது:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூலமாக கோவையிலும்,சேலத்திலும் முதல் முறையாக 4ஜி சேவை வழங்கி இருக்கிறோம். மற்ற செல்லிடப்பேசி நிறுவனங்களை விட பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை மிக அதிவேகமாக இருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இவ்விரு மாவட்டங்களிலும் ஒரு லட்சம் பேர் 4ஜி இணைப்பு பெற்றுள்ளனர்.
திருச்சி, மதுரை, நாகர்கோயிலிலும் ஒரே மாதத்தில் 4ஜி சேவை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக வேலூர், திருப்பூரில் 4ஜி சேவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிம் இலவசம்: 4ஜி சேவைக்கான சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல். இலவசமாகவே வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்கள் ரூ.100 வசூலிக்கின்றன. 4ஜி சேவை விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். 4ஜி சேவை வழங்கப்பட்டு வரும் அதே சமயத்தில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன.
கடந்த ஆண்டு திடீரென செல்லிடப்பேசி அழைப்புக் கட்டணம் குறைக்கப்பட்டதாலும், அதிக செலவுகளை தாக்குப்பிடிக்க முடியாததாலும் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொலைத்தொடர்பு துறையைப் பொருத்தவரை நிதி பற்றாக்குறை என்பது விரைவில் சரியாகி விடும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாப்பதே தனது தலையாய கடமை எனக் கூறியிருக்கிறார். இயற்கை சீற்றங்களின் போதும் பி.எஸ்.என்.எல். சேவை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் ராஜூ.