
பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு உள்ள தடைகளைக் களைய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதியுதவியைத் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி, தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, முதல்கட்டமாக தமிழக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைக் கொண்டு 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும்தான் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்கூட தமிழகத்தில் தகுதியுள்ள 75 லட்சம் விவசாயிகளில் 22 லட்சம் விவசாயிகளின் ஆவணங்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 53 லட்சம் விவசாயிகளுக்கு, அதாவது தகுதியுடைய விவசாயிகளில் 70.66 சதவீதத்தினருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவில்லை.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி பெற விண்ணப்பிக்கும் உழவரின் பெயரில்தான் நிலத்தின் பட்டா இருக்கவேண்டும். அத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் விவசாயிகள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு, அவர்களின் நிலங்களுக்கான பட்டா அவர்களின் பெயரில் இல்லை. எனவே, விவசாயிகளுக்குப் பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும்.
தகுதியுடைய சிறு, குறு விவசாயிகளுக்கு டிசம்பர் மற்றும் மார்ச் காலத்துக்கான ரூ.2 ஆயிரம் நிதியை நிலுவைத் தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.