
ரயில் மூலம் வியாழக்கிழமை கோவை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட தெய்வானை, பச்சய்யா ஆகியோரின் உடல்களைப் பார்த்து அழுத உறவினர்கள்.
ரயிலில் ஆன்மிகச் சுற்றுலா சென்றபோது உ.பி.யில் வெயிலுக்கு உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் வியாழக்கிழமை கோவை, குன்னூர் கொண்டு வரப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 60 -க்கும் மேற்பட்டோர் கடந்த 3ஆம் தேதி வட மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி, ஆக்ரா பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, கடந்த 10ஆம் தேதி ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் கோவைக்குத் திரும்பினர்.
அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்த கலாதேவி (58), சிங்காநல்லூர், வசந்தா நகரைச் சேர்ந்த தெய்வானை (74), நீலகிரி மாவட்டம், கேத்தியைச் சேர்ந்த பச்சய்யா (80), குன்னூர், ஓட்டுப்பட்டறையைச் சேர்ந்த சுப்பையா (71), பாலகிருஷ்ணன் (67) ஆகியோர் அவதிக்குள்ளாகினர்.
விரைவு ரயில் ஜான்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது 5 பேரும் மயங்கி விழுந்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர். அதில், 3 பேர் ரயிலிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. 2 பேரை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர்களும் உயிரிழந்தனர்.
5 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனை முடித்து, சொந்த ஊர்களுக்கு அனுப்ப ரயில்வே துறையினரும் காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, புது தில்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் குன்னூரைச் சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கலாவதி ஆகியோரின் உடல்கள் புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. தெய்வானை, பச்சய்யா ஆகியோரின் உடல்கள் ஜான்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டு வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கோவை வந்தடைந்தன. அங்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
குன்னூரில்...: உயிரிழந்த சுப்பையா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் விமானத்தில் கோவை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் காலை 4.30 மணியளவில் குன்னூர் வந்துசேர்ந்தன. ஓட்டுப்பட்டறையில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.