
ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலத்த காயமடைந்தார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ராஜன் தெருவைச் சேர்ந்தவர் அஜய் (19). பிளஸ் 2 முடித்துள்ள இவர் கல்லூரி படிப்பில் சேர இருந்தார். இந்நிலையில் அஜய், திருப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக சேரன் விரைவு ரயில் மூலம் புதன்கிழமை இரவுசென்று கொண்டிருந்தார்.
அந்த ரயில் ஈரோடு, தொட்டிபாளையம் ரயில் நிலையத்தைக் கடந்து வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த அஜய் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் அங்கு சென்று அஜயை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.