
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் செல்லவுள்ளனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நீதி ஆயோக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அவர் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர், சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்தின் சார்பிலான கோரிக்கைகளையும், கருத்துகளையும் முன்வைக்கிறார்.
முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் உடன் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகளும் செல்லவுள்ளனர்.
கோரிக்கை மனு: நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடமும், மத்திய அரசின் முக்கிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களிடமும் சந்தித்து அளிக்க உள்ளார். இதற்காக, 92-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு வழிச் சாலை திட்டம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பாக்கி வைத்துள்ள தொகையைக் கோருவது, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க உதவிகளைக் கோருவது, தமிழக மீனவர்கள் விவகாரம் என பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழகம் முன்வைக்கவுள்ளது.
துணை முதல்வர் பயணமா?: நீதி ஆயோக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பது குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. அவரது பயணத் திட்டம் வியாழக்கிழமை இரவு வரை உறுதியாக நிலையில், தேவை ஏற்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை மாலையோ அல்லது இரவோ தில்லி புறப்பட்டுச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், மாநில முதல்வர் என்ற அடிப்படையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.