
பள்ளி வளாக மாடிப்படியில் விளையாடிய மாணவி இறந்த விவகாரத்தில், 2 வாரத்தில் விளக்கமளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி உறையூரில் உள்ள டாக்டர் பங்களா பகுதியைச் சேர்ந்த ராம்குமார் - சங்கீதா தம்பதியின் மகள் இலக்கியா. உறையூரில் உள்ள மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 7 -ஆம் தேதி, மதிய உணவு இடைவேளைக்குப் பின், பள்ளிக் கட்டட மாடி கைப்பிடிச் சுவரில் சறுக்கி விளையாடி உள்ளார். அப்போது தவறி விழுந்து மயங்கிய இலக்கியாவை பல மணி நேரம் தாமதமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதை அடுத்து, இலக்கியா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மறுநாள் காலை இலக்கியா இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்தி புதன்கிழமை நாளிதழில் வெளியானது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தார் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ். மேலும், இதுகுறித்த அறிக்கையை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.