
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், அதில் 1,01,672 பேர் பங்கேற்றுள்ளனர்.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதலாக 4,000 பேர் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பில் 31,328 பேர் பங்கேற்கவில்லை. எனவே, அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. இந்த கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் மூன்று நாள்கள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் 28 வரை பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28 வரை நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பித்த 1.33 லட்சம் மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7-ஆம் தேதி தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 1,01,672 பேர் அதில் பங்கேற்றுள்ளனர். 31,328 பேர் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில் 98 ஆயிரம் பேர் மட்டுமே அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். ஆனால், இம்முறை 4,000 பேர் கூடுதலாகப் பங்கேற்றுள்ளனர். இந்த 1,01,672 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது:
பல்வேறு காரணங்களால் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்தது. இதன் காரணமாக, பங்கேற்கத் தவறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் மீண்டும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள், பங்கேற்காத மாணவர்களை அவர்களின் செல்லிடப்பேசிக்குத் தொடர்புகொண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்குமாறு ஆலோசனை வழங்கினர். இதன் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை கடைசி இரண்டு நாள்களில் அதிகரித்து கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் பேர் கூடுதலாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர் என்றார்.