
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க விரும்பிய மலாச்சி யானையை வனத்துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் தனக்குச் சொந்தமான மலாச்சி என்ற யானையை கடந்த 2007-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்க விரும்பினார். அந்த யானையை மதுரையைச் சேர்ந்த பாகன் லட்சுமணனின் மனைவி இந்திராவிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்த யானையை முறைப்படி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் விழாக்களுக்கு அழைத்துச் சென்றும், யாசகம் கேட்க வைத்தும் வருமானம் ஈட்டியுள்ளார்.
இந்த நிலையில், அந்த யானை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, கால்களில் சங்கிலி பூட்டப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்திரா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், யானையை மீட்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அந்த யானையை வனத்துறையினர் மீட்டு தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த யானையை முகாமில் வைத்தோ, மிருகக் காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.