தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தில்லியில் நைஜீரியர் கைது

மூலிகை எண்ணெயைக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் பணம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைக் கூறி, தமிழகம் உள்ளிட்ட தென்
தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கில்பர்ட் ஒகோயே பெட்ரோ (நடுவில்).
தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கில்பர்ட் ஒகோயே பெட்ரோ (நடுவில்).
Updated on
1 min read


மூலிகை எண்ணெயைக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் பணம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைக் கூறி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நைஜீரிய இளைஞரை தில்லி போலீஸார் கைது செய்தனர். 
இதுகுறித்து தில்லி இணையதளக் குற்றப் பிரிவு காவல் துணை ஆணையர் அன்யேஷ் ராய் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தின் வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் அளித்த புகாரில், ஃபோலினிக் பி12 எனும் மூலிகை மருந்து, பந்தயக் குதிரைகளுக்கு தடுப்பூசி தயாரிக்க தேவைப்படுவதாகவும், இந்த தயாரிப்புகளை கானா நாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் எனவும் சமூகவலைதளத்தில் இருந்து பேசியவர் கூறினார். 
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள மஹாவிர் ஹெர்பல் நிறுவனம், இந்த மூலிகை எண்ணெயை தயாரித்து வருவதாகவும், இதை தானே அதிக விலைக்கு வாங்கிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கூரியரில் வந்த 5 மி.லி . மூலிகை எண்ணெயைப் பெற்று தில்லியில் அந்த நபரைச் சந்தித்து அளித்தேன். அதை ரூ.86 ஆயிரம் கொடுத்து அந்த நபர் வாங்கினார். இதையடுத்து, அந்த நபர் தனக்கு 1 லிட்டர் மூலிகை எண்ணெய் வேண்டும் என கேட்டதையடுத்து, ரூ.25 லட்சத்தை மஹாவீர் ஹெர்பல் நிறுவனத்திற்கு அனுப்பி மூலிகை எண்ணெயைப் பெற்றேன். அதன்பிறகு மூலிகை எண்ணெயைக் கேட்டவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் அது மூலிகை ஆயில் இல்லை, தேன் என்பது தெரியவந்தது என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கில்பர்ட் ஒகோயே பெட்ரோ (39) என்பவர் கிரேட்டர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார். 
கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அவர், தென் மாநிலங்களில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.1.25 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
அவரது கூட்டாளிகளைக் கைது செய்யும் வகையில் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com