முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை கட்டுமானப்பணி ஆய்வு

முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியில் ரூ. 38.88 கோடியில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணிகளை பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம். பாலாஜி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அணை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம். பாலாஜி  தலைமையிலான பொறியாளர் குழுவினர்.
அணை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம். பாலாஜி  தலைமையிலான பொறியாளர் குழுவினர்.


முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியில் ரூ. 38.88 கோடியில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணிகளை பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம். பாலாஜி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கொள்ளிடத்தில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து 20 நாள்களுக்கு மேலாக அதிகளவு தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் கடந்த ஆக.22-ஆம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 
இதையடுத்து ரூ.95 லட்சத்தில் தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. 
சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகள், பெரிய கருங்கற்கள் அடுக்கப்பட்டு இந்தத் தடுப்பு உருவாக்கப்பட்டது.
அணையில் 110 மீட்டர் தொலைவுக்கு இடிந்துள்ள நிலையில், தற்காப்பு நடவடிக்கையாக 220 மீட்டர் நீளத்துக்கு மணல் மூட்டைகள், பெருங்கற்கள், கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது. 
சுமார் 5 அடி உயரத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு மணல் கொட்டப்பட்டது. தவிர, முக்கொம்பு மேலணையில் புதிதாக ரூ.410 கோடியில் அணை கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டு, மண்மாதிரி ஆய்வு முடிந்து, ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுமட்டுமல்லாது  ரூ.38.88 கோடியில் ஏற்கெனவே உடைந்த பகுதிகளில் இரும்புத் தகடுகள் வைத்தும், உடைந்த மதகுகளுக்குப் பதிலாக புதிய ரெகுலேட்டர்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
புதிய அணை கட்டி முடிக்கப்பட்டு வரும் நிலையில், பழைய அணையானது மக்கள் பயன்பாட்டுக்கு தொடரும் வகையில்  தற்காலிக தடுப்பணை கட்டப்படுகிறது. தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், புதிய ரெகுலேட்டர் மற்றும் தடுப்பணை கட்டும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம். பாலாஜி, திருச்சிக்கு வியாழக்கிழமை வந்தார். 
பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பொறியாளர்களுடன் ஆய்வு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, முக்கொம்புக்கு சென்று மேலணையில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட்டார்.  880 மீட்டர் நீளத்தில் நடைபெறும் பணிகளை  தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார். 
பணிகளின் முன்னேற்றம் தொடர்ந்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ். ராமமூர்த்தி, தமிழக நீராதார வளர்ச்சி குழுமத் தலைவர் எஸ்.எஸ். ராஜகோபால், திருச்சி நடுக்காவிரி வடிநிலை வட்டக் கண்காணிப்பு பொறியாளர் வி. ராசு, ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் ஆர். பாஸ்கர் மற்றும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com