
தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்த மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அருகில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடிபழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பேசிய பிறகு, அவர் அளித்த பேட்டி:
தருமபுரி மாவட்டத்துக்கு, காவிரிகூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ள மனுவை முதல்வரிடம் அளித்து , அத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினோம்.தருமபுரி மாவட்டத்தில், சிப்காட் அமைக்கவேண்டும் என்றும், அதற்காக 1200 ஏக்கர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்ததற்கு, உரிய பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறினார்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடினார். மேலும், 500 மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் 2,500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளை மூடுவது குறித்து அரசு பரீசிலனை செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு, பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக முதல்வர்தெரிவித்தார். மீண்டும் பேச்சுவார்த்தைநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறினார். 7 பேர் விடுதலை குறித்து,தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பியிருக்கிறது. 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். இதுகுறித்து சென்னை வரும் பிரதமருக்கும் கோரிக்கை விடுப்போம். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார் அவர். இதில், மாநிலத்தலைவர் ஜி.கே.மணி, சட்டப்பிரிவுசெயலாளர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.