
ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கு வரும் ஜூன் 2-இல் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக புதன்கிழமை (மார்ச் 6) முதல் வரும் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 2- ஆம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் (www. jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும் www.jipmer.edu.in என்ற இணையத்திலும் தகவல்களை அறியலாம். இணையதள பதிவு மார்ச் 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மே 20-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி காலை 8 வரை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மொத்தம் உள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும், காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உத்தரவுப்படி, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இம்முறை இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு உள்பட 120 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.