
தமிழகத்தில் ரூ. 133 கோடியில் 500 புதிய பேருந்துகளை கொடியசைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இயக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.132.87 கோடியில் 500 பேருந்துகள் தயாராகியுள்ளன. அதில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகளின் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. இந்தப் பேருந்துகளை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பேருந்துகளை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.