

கடலுôர் மாவட்டம், ம.ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம், குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.428 கோடியில் கதவணை கட்டுதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது கீழணை. கொள்ளிடம் ஆற்றின் வழியாக வரும் காவிரி நீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இதன்மூலம் கடலூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 910 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கர்நாடகம் மாநிலத்தில் பலத்த மழை, வெள்ள காலங்களில் காவிரியில் அதிகளவு தண்ணீர் திறக்கப்படும். இதுபோன்ற காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கும் வரும் உபரி நீர் வீணாக கடலுக்கு திறக்கப்படுகிறது. இதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் 22 டி.எம்.சி. தண்ணீர் வரை கடலுக்குச் சென்று வீணாகியது.
எனவே, கீழணைக்கு கீழே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் கடலூர் மாவட்டம், ம.ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம், குமாரமங்கலம் இடையே தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டப்படும் என கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால், கதவணை கட்டுமான பணி பல ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை.
விவசாய சங்கத்தினர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து புதிய கதவணை கட்டுதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழணை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம், ரூ.428 கோடியில் கதவணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக கீழணை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கடலுôர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்
செல்வன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பாரதிமோகன் எம்.பி., காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ நாக.முருகுமாறன், மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.