ஜெயலலிதா, ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினிகாந்தின் வீடு ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த வெடிகுண்டுகள் சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், அங்கு எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியை பரப்பும் வகையில், அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இந்த அழைப்பு குறித்து தேனாம்பேட்டை போலீஸார், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னை போலீஸார், கோயம்புத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோயம்புத்தூர் போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், மன அழுத்தத்தினால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

