

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) சென்னை வருகிறார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக-அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக, மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதன் அடுத்த கட்டமாக, புதன்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் தில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். பிற்பகல் 3.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக் கூட்டம் நடைபெறும் கிளாம்பாக்கத்துக்குச் செல்கிறார். முதலில், மத்திய அரசின் சார்பிலான சில நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
முதல் கூட்டம்: அரசு சார்பிலான நிகழ்ச்சிக்குப் பிறகு, அதிமுக-பாஜக கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார். முதல் முறையாக, அதிமுக-பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக, புதிய நீதிக் கட்சிகளின் தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் இணைந்த பிறகு அக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும்.
இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
தேமுதிக பங்கேற்குமா?: அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தேமுதிக இதுவரை தனது கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் புதன்கிழமை பிற்பகலில் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தேமுதிக தனது கூட்டணி முடிவு குறித்து காலையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக அறிவித்தால், பிற்பகலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் அல்லது கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் அரசியல் ரீதியாகவும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.