
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் சிறையில் உள்ள சயன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், தீபு, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, உதயன், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டிருந்த ஒரு ஆவணப்படத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனால் வழக்கின் திசையே மாறி விடும் என்பதால் சயன் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சயன், மனோஜ் ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாயினர். இதையடுத்து இருவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் பிடிப்பதற்காக 3 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, கேரள மாநிலம், திருச்சூர் அருகே புதுக்காடு பகுதியில் பதுங்கியிருந்தசயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள சயன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் சயன் குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...