
தேர்தல் நடத்தை விதிகள் அமலான பிறகு உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.13.9 கோடி ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இடைத் தேர்தலைப் பொருத்தவரை 3 வேட்பு மனுக்கள் (வியாழக்கிழமை 12 மணி நிலவரப்படி) தாக்கலாகியுள்ளன.
மாநிலத்தில் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சட்ட
விரோத ரொக்கப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேர்தல் விதிகளை மீறுவோர் குறித்து புகார் அளிக்க சி-விஜில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலவச தொலைபேசி எண்ணான 1950-ஐ தொடர்பு கொண்டும் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொண்ட சோதனைகளில் பல இடங்களில் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த வகையில், இதுவரை ரூ.13.9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
60,893 தொலைபேசி அழைப்புகள்: அதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலமாக இதுவரை 597 புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 187 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 1950 தொலைபேசி எண்ணுக்கு இதுவரை 60,853 அழைப்புகள் வந்துள்ளன.
தேர்தல் விதிகளை மீறி அனுமதியின்றி விளம்பரம் செய்ததாக 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்முறை வேட்புமனுத் தாக்கலின்போது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை வேட்பாளர்கள் படிவம் 26-இல் குறிப்பிட வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
சூலூரில் இடைத் தேர்தலா?: இதனிடையே, சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைந்ததையடுத்து அங்கு உடனடியாக இடைத் தேர்தல் நடத்தப்படுமா? என்று சத்ய பிரத சாகுவிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில்: பொதுவாக சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினால், அவரது தொகுதி காலியாக இருப்பதாக சட்டப் பேரவைச் செயலர் முறைப்படி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அந்தத் தகவலை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் அனுப்புவோம். அவர்கள் அதைப் பரிசீலித்து இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். சூலூர் விவகாரத்திலும் அந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்றார் சத்யபிரத சாகு.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...